வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் சிரில் ஒரு கிறிஸ்தவத் தாய்க்கும், பிற தெய்வத்தை வழிபடும் ஒரு தந்தைக்கும் பிறந்தார். சிரிலின் தாயார் கிறிஸ்தவ நெறியில் சிறந்து விளங்கியவர். அதனால் அவர் தன்னுடைய அன்பு மகனுக்கு கிறிஸ்தவ நெறியை தொடக்க முதலே புகட்டி வந்தார். சிரிலும் தன்னுடைய தாய் தனக்குக் கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் நல்ல முறையில் கற்றுக்கொண்டு கிறிஸ்துவின்மீது ஆழமான விசுவாசம் கொண்டு வாழ்ந்து வந்தார்.
சிரில், கிறிஸ்தவ நெறியின்மீது ஆழமான பற்றுகொண்டு வாழ்ந்து வந்தது அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் சிரிலை பலவாறாக சித்திரவதைப் படுத்தினார்; நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு உரோமைக் கடவுளை வழிபடு என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் சிரில் எதற்கும் பயப்படாமல் கிறிஸ்துவின் மீது மிக உறுதியாக நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் கடுப்பான சிரிலின் தந்தை வீட்டை விட்டே துரத்திவிட்டார். அப்போது அவர் தன் தந்தையைப் பார்த்துச் சொன்னார், “இப்போது நான் இழப்பதோ மிகக் குறைவுதான். ஆனால் எதிர்காலத்தில் விண்ணகத்தில் நான் பெறக்கூடிய கைமாறோ மிகுதியாகும்”. இவ்வாறு சொல்லிவிட்டு அவர் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதற்கிடையில் சிரில், கிறிஸ்தவ விசுவாசகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றார் என்ற செய்தி செசாரியாவின் ஆளுநனுக்குத் தெரிய வந்தது. அவன் படைவீரர்களை அனுப்பி, சிரிலை பிடித்து வரச் சொன்னான். அவரைப் பிடிக்க வந்த படைவீரர்கள், சிரில் வயதில் மிகவும் சிறியவராக இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், “நீ தயதுசெய்து கிறிஸ்தவை மறுதலித்துவிடு, இல்லையென்றால் நீ பலவாறாக சித்ரவதை செய்யப்படுவாய்” என்றார்கள். இதைக் கேட்டு சிரில் பயப்படாமல் மிகவும் மனவுறுதியோடு இருந்தார். பின்னர் அவர் ஆளுநன் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டார்.
ஆளுநன் அவரைப் பார்த்துவிட்டு, “உனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறேன், நீ கிறிஸ்துவை மறுதலித்து விடு. அப்படிச் செய்தால் உன்னை நான் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். இல்லையென்று சொன்னால், நீ வாளுக்கோ அல்லது தீயிக்கோ இரையாவாய்” என்றார். ஆளுநன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு சிறிதும் பயப்படாமல், “நான் கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பேனோ தவிர, உரோமைக் கடவுளை ஒருபோதும் வணங்க மாட்டேன். அதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை” என்றார்.
இதைக் கேட்டு ஆளுநன் கடுப்பானான். பின்னர் படைவீரன் ஒருவனிடமிருந்து வாளை வாங்கி சிரிலை வெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு சிரில் தன்னுடைய சிறி வயதில் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தி மறைசாட்சியானார்.