பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list

கண்டற்பெரி நகர தூய அகஸ்டின்

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூறும் தூய அகஸ்டின் பிறந்து வளர்ந்தது எல்லாம் உரோமையில்தான். இவர் எப்போது பிறந்தார், இவருடைய குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இவர் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார் என மிக உறுதியாகச் சொல்லலாம்.

இவர் உரோமையில் உள்ள தூய ஆன்ட்ரு துறவுமடத்தில் தலைவராக இருந்து பணிகளைச் செய்துகொண்டிருந்த தருணத்தில், திருத்தந்தை முதலாம் கிரகோரியார் இவரை அழைத்து, “நீங்கள் இங்கிலாந்து சென்று நற்செய்திப் பணியாற்ற வேண்டும்” என்று கேட்டார். தொடக்கத்தில் திருத்தந்தை சொன்னதற்கு மறுப்புச் சொன்ன, அகஸ்டின் அதன்பின் அதனை இறைத் திருவுளமாக நினைத்துக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

அவர் சென்ற நேரம் கெண்டில் எதல்பர்ட் அரசராக இருந்தார். அவரிடத்தில் சென்ற அகஸ்டின் தான் வந்ததன் நோக்கத்தை எடுத்துச் சொன்னார். தொடக்கத்தில் தயங்கிய அரசர், அரசியின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அகஸ்டினையும் அவரோடு வந்த அருட்பணியாளர்களையும் நற்செய்தி அறிவிக்க முழுமையான சம்மதத்தைத் தெரிவித்தார். இதனால் அகஸ்டின் தன்னோடு வந்த அருட்பணியாளர்களின் உதவியோடு இங்கிலாந்து நாடு முழுக்க நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அவர் அறிவித்த நற்செய்தியினால் அரசர் உட்பட ஏராளமான பேர் மனமாற்றம் அடைந்தார்கள். அரசரும் தாமாகவே முன்வந்து ஓர் ஆலயத்தை திருச்சபைக்காகத் தந்தார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டில் நற்செய்தி அறிவித்த சமயங்களில் நிறைய பிறமதக் கோவில்களை அர்ச்சித்து கிறிஸ்தவக் கோவில்களாக மாற்றினார். பலரை கிறிஸ்தவ மதத்தில் இணைக்க அரும்பாடு பட்டார். அவருடைய அயராத உழைப்பு வீண்போகவில்லை. ஏராளமான பேர் கிறிஸ்தவத்தை தழுவினார்கள். இதற்கிடையில் அவர் கண்டர்பெறி ஆயராகவும் உயர்த்தப்பட்டார். இப்படி இங்கிலாந்து மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தன் உடல் பொருள் ஆவி அத்தனையயும் கொடுத்த அகஸ்டின் 604 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் ‘இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர்’ எனவும் அழைக்கப்படுகின்றார்.

Back to list