வாழ்க்கை வரலாறு
பீத், இங்கிலாந்து நாட்டில் உள்ள மங்டன் என்னும் இடத்தில் 672 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஏழு வயது நடக்கும்போது தூய பேதுரு மற்றும் தூய பவுல் துறவுமடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இயல்பிலே திறமைசாலியாக விளங்கிய பீத் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினார்.
686 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், இவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளை ஏற்பட்டது. அதில் ஏராளமான பேர் இறந்துபோனார்கள். இவர் மட்டும் எப்படியோ அதிஸ்டவசமாக பிழைத்துக்கொண்டார். இதனை இறைவனின் அருட்பெரும் செயல் என உணர்ந்த இவர், இறைவனுக்காக தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். அதனால் இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அதன்படி இவர் தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். பெனடிக்ட் பிஸ்காப் என்பவர் இவரை சிறந்த விதமாய் வழி நடத்தினார். இவ்வாறு பீத் தன்னுடைய 19 வது வயதில் திருத்தொண்டராகவும் அதற்கு அடுத்த ஆண்டில் குருவானவராகவும் உயர்ந்தார்.
பீத் தான் வாழ்ந்த காலத்திலேயே மக்களால் ‘வணக்கத்திற்கு உரியவர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். காரணம் இவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி நிறைந்த வாழ்க்கை. மட்டுமல்லாமல் இவர் விவிலியத்தில் ஆழமான புலமை பெற்றிருந்தார். அந்தப் புலமை இவரை பல நூல்களை எழுதச் செய்தது. குறிப்பாக இவர் எழுதிய 45 நூல்களில் 30 நூல்கள் விவிலியம் தொடர்பானது என்பது குறிப்பிடத் தக்கது.
735 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே இவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக” என்று சொல்லி தன்னுடைய ஆவியை இறைவனிடத்தில் ஒப்படைத்தார். இவருக்கு 1899 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் மறைவல்லுநர் பட்டம் கொடுக்கப்பட்டது.