வாழ்க்கை வரலாறு :
ப்ளோரியன், 250 ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவில் உள்ள செட்டியு என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குழந்தைப் பருவத்தைக் குறித்த செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை.
ப்ளோரியன், உரோமை அரசன் டயோக்ளசியனின் படைப்பிரிப்பில் படைத்தளபதியாகப் பணிசெய்து வந்தார். அக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உரோமைக் கடவுள்களை அவமதிக்கின்றார்கள் என்றும் நிக்கோமீதியாவிலிருந்த அரண்மனையின் அழிவுக்கு அவர்களே காரணம் என்ற தவறான செய்தி பரவி வந்தது. இதைக் கேள்விப்பட்ட அரசன் டயோக்ளசியன் சினம்கொண்டான். அவன் தன்னுடைய ஆளுநன் அக்குலினுசை அழைத்து கிறிஸ்தவர்களைக் கொன்றுபோடச் சொன்னான்.
அரசன் விடுத்த ஆணையை அக்குலினுஸ் தனக்குக் கீழ் இருந்த படைத்தளபதிகள் வழியாக செயல்படுத்த நினைத்தான். எனவே அவன் படைத்தளபதிகள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் கிறிஸ்தவர்களைக் கொன்றுபோடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அவனுடைய உத்தரவுக்கு எல்லாரும் கீழ்படிந்து நடந்தார்கள். ப்ளோரியனைத் தவிர. ப்ளோரியனோ, “என்னால் கிறிஸ்தவர்களை எல்லாம் கொன்றுபோட முடியாது. ஏனெனில் நான் ஓர் உண்மைக் கிறிஸ்தவன்” என்றார். இதைக் கேட்டு வெகுண்டெழுந்த அக்குலினுஸ் செய்தியை அரசன் டயோக்ளசியனிடம் சொல்ல, அவன் ப்ளோரியனைக் கொன்றுபோட உத்தரவிட்டான்.
அக்குலினுசோ ப்ளோரியனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான், “ப்ளோரியனே! நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, உரோமைக் கடவுளை வணங்கு. அப்படிச் செய்தால் நான் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறேன். இல்லையென்றால் நான் உன்னை உயிரோடு எரித்துவிடுவேன்” என்றான். அக்குலினுஸ் சொன்ன வார்த்தைக்கெல்லாம் ப்ளோரியன் மயங்கிவிடாமல், “நீங்கள் என்னை தீயில் போட்டு எரித்தாலும் என்னுடைய ஆன்மா தீயின் வடிவில் விண்ணகத்திற்குச் செல்லும்” என்றார். இதைக் கேட்டு இன்னும் சினங்கொண்ட அக்குலினுஸ் ப்ளோரியனின் தோலை உரித்து கட்டிவைத்து அடித்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்திலிருந்து சிறிதளவுகூட மாறவில்லை. எனவே அவன் ப்ளோரியனின் உடலை ஒரு கயிற்றில் வைத்து நன்றாகக் கட்டி ஏன்ஸ் கடலில் போட்டு ஆழ்த்தினான்.
இது நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு ப்ளோரியனின் இறந்த உடல் கரையொதுங்கியது. அவருடைய உடலை எடுத்த வலேரியா என்ற பெண்மணி அவருடைய உடலை நல்லடக்கம் செய்தார்.